வலை மகுடம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வலை மகுடம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், ஜனவரி 01, 2008

சாதனைப் பதிவர் - காசி

சந்திப்பின் பின்னணி

திருப்பூருக்கு ஒரு தொழில் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ரயிலில் போய்க் கொண்டிருந்தோம்.

தமிழ்மணம் குறித்துப் பேசும் போது அதை உருவாக்கிய காசி பற்றிச் சொல்லி இப்போது அவர் கோவையில்தான் தொழில் நடத்துகிறார் என்று சொன்னதும் வளர்தொழில் ஆசிரியர் ஜெயகிருஷ்ணனுக்கு ஆர்வம் வந்து விட்டது. 'சேவை செய்யும் கருவி உருவாக்கி விற்கிறார்' என்று அவரது உதவியாசிரியரிடம் சொல்லி ஒரு பேட்டி எடுத்து வர திட்டம் போட்டார்.

அப்படியே ஓசை செல்லாவுக்குத் தொலைபேசி காசியின் தொடர்பு எண்ணைக் கேட்டால், சிறிது நேரத்தில் காசியே அழைத்தார். வண்டி ஓட்டத்தில் இணைப்பு அறுந்து விட சரிவர பேச முடியாமல் துண்டித்துப் போனது.

திருப்பூர் வந்ததும் விடுதிக்கு அழைத்துப் போக வண்டிகள் ஏற்பாடு. விடுதியில் வந்து சேரும் போது பத்து மணிக்கு மேல் ஆகியிருந்தது. அங்கிருந்து தொலைபேசி ஞாயிற்றுக் கிழமை காலை 10 மணிக்கு கோவையில் காசியை பேட்டி காண ஏற்பாடு செய்து கொண்டோம். வளர்தொழில் உதவி ஆசிரியர் முத்து பாண்டியுடன் நானும் போவதாகத் திட்டம் போட்டுக் கொண்டேன். எங்களது கருத்தரங்கம் மாலை நான்கு மணிக்குத்தான் என்பதால், காலையில் எட்டு மணிக்கெல்லாம் பேருந்து பிடித்து கோவை போய் பேசி விட்டு மதியம் இரண்டு மணிக்குள் திரும்பி விடலாம் என்று திட்டம்.

பத்து மணி கோவையில் இருக்க வேண்டும் என்றால் எட்டரைக்கு பேருந்து ஏற வேண்டும், அதனால் ஏழே முக்கால் வாக்கில் கிளம்பி விடுவோம் என்று திட்டமிட்டிருந்தாலும் முத்துபாண்டியும் என்னைப் போலவே அதிகாலை சேவலாக இருக்க ஏழு மணிக்குப் பேருந்து நிலையம் வந்து விட்டோம். ஒரு தேநீரைக் குடித்து விட்டுப் பேருந்தில் ஏறினால், இழுத்து இழுத்து எட்டே முக்காலுக்கு கோவை காந்திபுரம் பேருந்து நிலையம் வந்து சேர்ந்தது. வழி நெடுக பத்திரிகை நடத்துவதில் இருக்கும் சிரமங்களையும் தடைகளையும் பற்றிப் பேசிக் கொண்டே வந்தார் முத்துப்பாண்டி.

காந்திபுரம் பேருந்து நிலையத்தில் இறங்கி அன்னபூர்ணா கவுரிசங்கரில் சாப்பிட்டு விட்டு தொலைபேசினால் காசியும் புறப்பட்டு வந்து கொண்டிருந்தார். தனது வண்டியிலேயே வந்து எங்களை ஏற்றிக் கொண்டு அவர்களது விற்பனை அறைக்கு அழைத்துப் போனார்.

சந்தவை, சந்தகை என்று கொங்கு பகுதியில் அழைக்கப்படும், பொதுவாக மற்ற இடங்களில் சேவை என்று அறியப்பட்ட, சிலரால் இடியாப்பம், சேமியா என்று சொல்லப்படும் உணவு தயாரிக்கும் கருவி வடிவமைத்து, உற்பத்தி செய்து சந்தைப்படுத்துகிறார்.

ஏழு ஆண்டு திட்டமிடல்

பொறியியல் துறையில் பட்டயப் படிப்பு படித்து அதற்கு மேல் பட்டம் பெற்று சென்னையில் வேலை பார்த்துக் கொண்டே பட்ட மேல்படிப்பு ஐஐடியில் முடித்து விட்டு கோவையில் ரூட்ஸ் நிறுவனத்தில் ஆராய்ச்சியாளராக பணி புரிந்து கொண்டிருந்தாராம். இளம் வயதிலேயே ஆராய்ச்சிப் பிரிவு இயக்குநர் என்று பதவி உயர்வு பெற்று இன்று வீடுகளில் பரவலாகப் பயன்படுத்தப்படும் தரை துடைக்கும் கைப்பிடியுடன் கூடிய mopஐ வடிவமைப்பதில் பெரும்பங்காற்றினாராம்.

தனியாக தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்று தோன்றி நண்பர்களுடன் விவாதித்து மூன்று நண்பர்களாக திட்டம் போட ஆரம்பித்தார்களாம். காசி, புதிய கண்டுபிடிப்புகள், பொருட்கள் உருவாக்கத்தில் வல்லவர், இன்னொரு நண்பர் திட்டங்கள் வகுத்தல், செயல்படுத்தலில் திறமை வாய்ந்தவர், மூன்றாமவர் நடைமுறைப் படுத்தலில் ஆர்வம் உள்ளவர்.

சேவை மேஜிக் என்ற இப்போது உருவாக்கியுள்ள கருவிக்கான எண்ணம் 1999ல் தோன்றியதாம். 2001ல் முதல் மாதிரியைச் செய்து பார்த்து இது சாத்தியமானதுதான் என்று உறுதிப் படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

இந்தக் கண்டுபிடிப்பை நடைமுறைக்குக் கொண்டு வர வேண்டும் என்றால் முதலீடு வேண்டும் என்பதை உணர்ந்து சில ஆண்டுகள் அதற்கான பணம் சேமிப்பதில் ஈடுபட்டு விட்டு தொழிலில் இறங்கலாம் என்று முடிவு செய்தார்களாம். வீட்டு பயன்பாட்டுப் பொருளாக விற்கப்படவுள்ள இந்த உருவாக்கத்திற்கான காப்புரிமையையும் அதற்குள் பெற்று விடலாம் என்று முடிவு செய்தார்களாம்.

2002ல் டாடா கன்சல்டன்சி சர்வீஸ் நிறுவனத்தில் சேர்ந்து அவர்களது வாடிக்கையாளரான ஜெராக்ஸ் நிறுவனத்தின் அமெரிக்க ஆராய்ச்சிப் பிரிவில் பொறியியல் சேவைப் பிரிவில் பணி புரிய போயிருக்கிறார் காசி. இரண்டு ஆண்டுகள் பணி புரிந்து விட்டுத் திரும்ப வேண்டும் என்று நினைத்திருந்தாலும், அது நீண்டு நீண்டு நான்கு ஆண்டுகளாக ஆகி விட்டது.

அந்த இடைக்காலத்தில்தான் தமிழ்மணம் உருவாகியிருக்கிறது. தமிழ்மணத்தின் சிறப்பும் வெற்றியும் எப்படி உருவாகின என்பதின் பின்னணியும் காசியுடன் பேசும் போதுதான் புரிந்தது. ஒரு தொழிலை உருவாக்க ஏழு ஆண்டுகளாக திட்டமிட்டுத் தொலைநோக்குப் பார்வையோடு செயல்பட்ட அவரது அதே செய்நேர்த்தியும், சிந்தனை ஆழமும்தான் தமிழ்மணம் என்ற திரட்டியை உருவாக்கியிருக்கிறது.

இப்படியே இருந்தால், அமெரிக்க, பெருநிறுவன சொகுசு வாழ்க்கையில் மூழ்கி நம்முடைய முதன்மை நோக்கத்தைக் கைவிட்டு விடுவோம் என்று விழித்துக் கொண்டு வேலையே விட முடிவு செய்து, 'வெளி நாடு போய் விட்டுத் திரும்புபவர்கள் ஆறு மாதங்கள் இந்தியாவில் பணி புரிய வேண்டும்' என்ற டிசிஎஸ்ஸின் விதிமுறையையும் நிறைவு செய்து விட்டு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நியூஹோம் (NuHom) என்ற தனியார் பங்கு நிறுவனத்தைத் தொடங்கியிருக்கிறார்கள்.

பொருளும் சேவையும்

இரண்டு ஆண்டு உழைப்பின், திட்டமிடலின், செயலாக்கத்தின் விளைவு எங்களை வரவேற்றது.

ஒரு பக்கச் சந்தில் சிறிய அலுவலகம். வண்டியை நிறுத்தி விட்டு வெளிக்கதவைத் திறந்து உள்ளே அழைத்தார். ஞாயிற்றுக் கிழமை ஆதலால்் அந்த பார்வை மையத்தில் பணி புரியும் பெண் பத்து மணிக்கு மேல்தான் வருவாராம். முன்னறையில் சமையல் அடுப்பு, சேவை மேஜிக் செய்முறைக்கான ஏற்பாடுகள் ஒரு புறம், பக்க வாட்டுச் சுவரில், செய்முறை குறும்படத்தைக் காட்ட ஒரு காட்சிப் பெட்டி,

உள்ளறையில் பெட்டிகள் அடுக்கப்பட்டிருக்க உட்கார்ந்து பணி புரிய மேசை நாற்காலிகளும்.

'நேற்று ஒரு கண்காட்சிக்குப் போய் வந்தோம். எல்லாவற்றையும் அப்படியே போட்டு விட்டும் போனோம். அதான் எல்லாம் தாறுமாறா கிடக்கு' என்று சொல்லப்பட்ட இடத்திலேயே ஒழுங்கும் நேர்த்தியும் தெரியத்தான் செய்தது.

'என்ன காசி பெட்டியில் நிறங்களைக் காணவில்லை' என்று உள்ளே நுழைந்ததும் கண்ணில் பட்ட அட்டைப் பெட்டிகளைப் பார்த்துக் கேட்டேன். இன்னொரு பக்கம் தரையில் வண்ண மயமாக, கடையில் விற்பனைக்கு வைக்கக் கூடிய கவர்ச்சிகரமான பெட்டி வெளிப்புற வடிவமைப்புடன் பெட்டிகள் அடுக்கப்பட்டிருந்தன.

எங்கிருந்து எடுத்தார் என்று நாம் கவனிக்கக் கூட தேவையில்லாமல் அவர் மேசை மீது ஒரு மாதிரி முளைத்து விட்டிருந்தது.

கீழ்ப் பாத்திரம் சாதாரண ஆறு லிட்டர் குக்கர்தான். கொஞ்சம் விளிம்பில் மாறுபாடுகள் உண்டு. அதில் தண்ணீர் ஊற்றிக் கொள்ள வேண்டும். எவ்வளவு தண்ணீர் ஊற்ற வேண்டும் என்பதைக் குறிக்க ஒரு வரி போட்டிருக்கிறார்கள். இதை கீழ்ப் பாத்திரம் என்று அழைக்கிறார்.

அந்தப் பாத்திரத்தின் மூடியில் சிறப்பு வடிவமைப்பு செய்திருக்கிறார்கள். இது நடுப் பாத்திரம். மாவை ஊற்றுவதற்கு ஒட்டாத பூச்சு பூசப்பட்ட உட்பகுதி. வெளிப் பகுதியில் உலோக முடி. உட்பகுதியின் நடுவில் ஒரு தண்டு.

அரைத்த புழுங்கலரிசி மாவை ஊற்றி மூடி அடுப்பில் வைத்து விட்டால் 25 நிமிடங்களில் மாவு வெந்து விடும். அதன் பிறகு மேல் பாத்திரமான நெகிழியில் (பிளாஸ்டிக்கில்) செய்யப்பட்ட மேல் பாத்திரத்தைப் பொருத்தி குக்கர் வெயிட்டையும் போட்டு விட்டால், நீராவியின் அழுத்தத்திலேயே பிஸ்டன் தண்டு தள்ளப்பட்டு சேவை நடுப்பாத்திரத்தின் மேல் பகுதியில் பொருத்தப்பட்டுள்ள ரப்பர் அச்சின் வழியாக தள்ளப்பட்டு நெகிழி பாத்திரத்தில் சேர்ந்து விடுகிறது.

இத்தோடு நான்கு பேர் சாப்பிடும் அளவிலான சேவை தயார்.

நம்முடைய பாரம்பரிய உணவான சந்தவையின் செய்முறையை எளிமைப்படுத்தி வேலையைக் குறைத்து பரவலாக்க வேண்டும் என்ற நோக்கத்துடனும் ஆரம்பிக்கப் பட்ட முயற்சி இது.

இந்த உணவின் சிறப்பு இப்போது கொங்கு பகுதிகளில் மட்டும்தான் தெரிகிறது. ஆனால் அங்கிருந்து மற்ற ஊர்களுக்கு கொண்டு செல்லப்பட்ட சேவை நாழிகள் முயற்சித்த எல்லோரையும் கவர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. இது போல அதிக நேரம் வீணாகாமல், பிசுபிசுப்பு இல்லாமல், துருப்பிடித்து விடாமல், எந்திர இணைப்புகள் இல்லாமல் கிடைக்கும் கருவி, சேவையை அன்றாடம், வாரத்துக்கு மூன்று நான்கு முறை செய்யப்படும் உணவாக ஆக்கி விடலாம்.

இரண்டு நிமிட நூடுல்ஸின் கெடுதல்கள் என்று குங்குமத்தில் வந்த கட்டுரையை பெரிதாக நகலெடுத்து வைத்திருக்கிறார். குழந்தைகள் தொலைக்காட்சியால் மூளைச் சலவை செய்யப்பட்டும், வேலை குறைவு என்று பெற்றோர்களும் 2 நிமிட மேகி நூடுல்ஸ் சாப்பிடுவதை ஊக்கப்படுத்த அதைப் பார்க்கும் மற்றக் குழந்தைகளும் அதையே கேட்க தினமும் அதையே சாப்பிடும் போக்கு கூட வந்து விட்டது.

அதிலிருந்து ஆரம்பித்து, நமக்குத் தோன்றும் கேள்விகளுக்கு எல்லாம் ஏற்கனவே விடை கண்டிருந்தார். இன்னும் நமக்குத் தோன்றாத நூற்றுக் கணக்கான நுணுக்கங்களையும் பார்த்துப் பார்த்து செய்திருக்கிறார்கள்.
ஏன் சேவை என்று பெயர் வைத்தோம், ஏன் காப்புரிமை கிடைக்கும் வரை காத்திருந்தோம் என்றெல்லாம் ஒவ்வொன்றையும் திட்டமிட்டிருக்கிறார்கள்.

மூடியின் மேல், Important:Read Instructions Before Use என்ற பாதுகாப்பு எச்சரிக்கையை 'ஆங்கிலம் தெரியாத நமது இல்லத் தலைவிகள் எப்படி படிக்க முடியும்' என்று, ஆங்கிலம்/தமிழ் என்று இரண்டு மொழிகளிலும் கொடுத்திருக்கிறார்கள்.

கீழ்ப் பாத்திரத்தின் பக்கவாட்டில் செயல்முறை விளக்கப்பட வரிசை ஒன்றையும் பொறித்திருக்கிறார்கள். ஒரு வேளை மற்ற விளக்கங்களை பார்க்காத, அல்லது மறந்து விட்ட ஒருவருக்கும் பயன்படுத்த எளிதாக இருக்க வேண்டும் என்று.

ஆறு லிட்டர் குக்கர் கடையில் ஆயிரத்து இருநூறு ரூபாய்களுக்குக் கிடைக்கிறதாம். இந்த புதிய கருவியின் விலை இரண்டாயிரத்து எழுநூற்று ஐம்பதுதானாம். தேடித் தேடி செலவுகளையும் இழுத்துப் பிடித்து ஆகக் குறைந்த விலையில் உற்பத்தி செய்கிறார்கள். இன்னும் உற்பத்தி அளவு அதிகமாகும் போது விலை குறையலாம்.

உலகத்தரத்தில் வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டு, பொதி செய்யப்பட்டு விற்பனைக்கும் வந்துள்ளது.

சந்தைப்படுத்துதல்
  • ஆரம்பத்தில் வீடு வீடாகப் போய் விற்கும் முறையைப் பின்பற்றினார்களாம். தெரிந்தவர்கள், நண்பர்கள் என்று முயன்று பார்க்கக் கொடுப்பதில் ஆரம்பித்து அவர்களது தொடர்புகளுக்கும் விற்பதை செய்திருக்கிறார்கள்.
  • அந்த முறையில் நிறைய உழைப்பும் செலவும் தேவைப்படுவதைப் பார்த்து செயல் விளக்கத் திரைப்படம் ஒன்றை தயாரித்திருக்கிறார்கள். அதை குறுவட்டில் பதித்து ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் கொடுத்து விடுகிறார்களாம்.
  • மல்லிகா பத்ரிநாத்தை அணுகி முப்பது வகை சேவை சமையல் என்று ஒரு கையேடு எழுதித் தரச் சொல்லி அதையும் இலவசமாக வாடிக்கையாளருக்குக் கொடுக்கப் போகிறார்கள்.
  • கருவியை எப்படிப் பயன்படுத்துவது என்பதற்கான விளக்கக் கையேடும் ஆங்கிலத்திலும் தமிழிலுமாக தயாரித்திருக்கிறார்கள். அதையும் வடிவமைத்து, எழுதி உருவாக்கியவர் காசிதானாம்.
  • பாத்திரக் கடையில் அடுக்கி வைத்திருந்தால் பார்க்க பளிச்சென்று தெரிய வேண்டும் என்று மஞ்சள் நிறத்தில் அட்டைப் பெட்டி வடிவமைப்பு.
  • குடும்பப் பாங்கான முகம் வேண்டும் என்று பளபளப்பான நடிகைகளைத் தவிர்த்து பாண்டவர் பூமி படத்தில் நடித்த நடிகையை விளம்பரத்தில் போட்டிருக்கிறார்கள்.
  • 2750 ரூபாய்களுக்கு கருவியை வாங்கி விட்டு சேவை செய்ய மட்டும் பயன்படுத்த வேண்டுமா என்று நினைப்பவர்களுக்கு நடு மேல் பாத்திரங்களை பயன்படுத்தாமல் தனியாக விற்கும் இன்னொரு மூடியை (+200) வாங்கிப் பொருத்தி சாதாரண உயர் அழுத்தக் கலனாகவும் பயன்படுத்திக் கொள்ளலாம். வீட்டில் ஏற்கனவே இருக்கும் குக்கருடன் இன்னொன்று கூடுதல் வசதிக்காக.
திட்டங்கள்
  • இப்போது மாதம் 500 எண்ணிக்கை தயாரிக்கும் உற்பத்தித் திறனை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்களாம். கூடவே விற்பனைக்கான முகவர்களையும் ஒவ்வொருவராக நியமிக்க வேண்டும்.
  • சந்தைப்படுத்தலில் வல்லவராக ஒருவர் பொறுப்பேற்றுக் கொண்டால் இன்னும் வேகமாகச் செய்யலாம். இன்னொரு பங்குதாரர் உற்பத்தி சம்பந்தமான பணிகளைப் பார்த்துக் கொள்கிறாராம்.
  • அரிசி மாவில் மட்டுமின்றி ராகி, கோதுமை மாவுகளிலும் சேவை செய்யலாம் என்று விளம்பரப்படுத்துகிறார்கள்.
சில ஆலோசனைகள்
  • இதற்கு இன்னும் சில கூட்டல்கள் வேண்டும். தோசை இட்லி மாவுகளே கடையில் அரைத்துக் கிடைக்கும் இந்தக் காலத்தில் புழுங்கலரிசியை அரைத்து மாவாக்கி சேவை செய்ய வேண்டும் என்பது ஒரு மனத்தடை. ஆரம்ப காலத்தில் நியூ ஹோம் நிறுவனமே வேறு யாரிடமாவது இணைந்து அரைத்த புழுங்கலரிசி மாவையும் பொதிந்து விற்கலாம்.
  • சேவை செய்த பிறகு பல்வேறு சுவைகளில் அதை தாளிப்பதற்கான கலவைகளும் தயாரிக்கப்பட வேண்டும். எலுமிச்சை சேவை, தேங்காய் சேவை, புளி சேவை, தக்காளி சேவை என்று பல முயற்சித்து பார்க்கலாம். மேகி நூடில்சில் கொடுப்பது போல முன்தயாரிப்பாக இந்த சுவைப் பொதிகளும் தனியாக விற்கப்பட்டால் சேவை செய்து சாப்பிடுவதற்கான இன்னொரு மனத்தடை விலகலாம்.
பரவலாக தீவிரமாக பிரபலப்படுத்தப்பட்டு, உற்பத்தி, வினியோகம், சந்தைப்படுத்துதல் என்ற மூன்றையும் ஒருங்கிணைத்து செயல்பட்டால் தமிழ்நாடு முழுவதும் மட்டுமின்றி அரிசி உண்ணும் சமூகங்களான தென் சீனா, வியட்நாம், தென்கிழக்காசிய நாடுகள் என்று ஆரம்பித்து இத்தாலிய பிட்சாவும், நூடுல்சும் சாப்பிடும் அகில உலகுக்கும் பரவ வாய்ப்பிருக்கும் ஒரு கண்டுபிடிப்பு இது.

அதற்குத் தேவையான மூலதனத்தைத் திரட்டி தகுந்த ஆட்களை வேலைக்கு வைத்து, திறம்படச் செயல்பட்டு இன்னும் பத்து ஆண்டுகளில் அமெரிக்க நகரங்களிலும், ஆஸ்திரேலிய நகரங்களிலும் சேவை உணவு விடுதிகள் பரவும் நிலை வந்து விடலாம்.

புதன், மே 30, 2007

மதி கந்தசாமி - வலை மகுடம்

2006 ஏப்ரலில் தமிழில் வலைப்பதிவு ஆரம்பித்த புதிதில் புது மாடு குளிப்பாட்டும் வேகத்தில் ஏதேதோ எழுதிக் கொண்டிருந்தேன்.

ஒரு இடுகை எழுதி தமிழ்மணத்தில் இணைத்து சில நிமிடங்களில் காணாமல் போய் விட்டது. இன்னும் ஒரு முறை பதிந்து இணைத்தால் மீண்டும் காணவில்லை. அதைக் குறிப்பிட்டு மறுபடியும் இணைத்தால், ஒரு மின்னஞ்சல்.

'இடுகையின் தலைப்பு நீளமாக இருப்பதால் பிளாக்கர் அதை விழுங்கியிருக்கும்' என்று சுருக்கமாக குறிப்பிட்டு வழி காட்டியிருந்தார் மதி கந்தசாமி.

தமிழ் வலைப்பதிவர்களுக்கு ஒரு காவல் தேவதை போல தடுமாறும் போது கை கொடுத்து, பின்னணியில் தனது தொழில் நுட்பப் பணிகளை சுறுசுறுப்பாக செய்து வருகிறார் மதி.
  • ஆரம்பத்தில் தமிழ் வலைப்பதிவுகளைத் தொகுத்துக் கொடுத்த வலைப்பதிவை நடத்தியது,
  • தமிழ்மணத்தை காசி ஆறுமுகம் நடத்தும் போது பல வேலைகளில் பங்கேற்றது,
  • தமிழ் மீடியா இனிஷியேடிவ் நிறுவனம் பொறுப்பேற்ற பிறகு அதிகாரப் பூர்வமாக இணைந்தும் தனிப்பட்ட முறையிலும்
தமிழ் வலைப்பதிவர்கள் சமூகம் தளைக்க இன்றியமையாத பணி ஆற்றி வருகிறார்.

அவரது எழுத்துக்களின் ஈழத்து வேர்களும் மேற்கத்திய மணமும் ஒரு தனித்துவத்தைக் கொடுக்கின்றன. சென்னையில் தனது வாழ்க்கையைக் குறித்து அவர் எழுதியிருந்த இடுகையில் பயன்படுத்திய சொல்லாடல்கள் மறக்க முடியாதவை.

திடீரென்று நான் ரசித்த காதல் கதைகள் என்று ஒரு பெரிய திரைப்படப் பட்டியலை வெளியிட்டிருக்கிறார். இவ்வளவு படங்களைத் தேர்ந்தெடுக்க எத்தனை படங்களைப் பார்த்திருப்பார் என்று வியப்பாக இருந்தது.

இன்றைக்கும் யாராவது புதிய பதிவரின் குழப்பான நேரங்களில் எங்கிருந்தோ அவரது உதவிக் கரம் நீண்டு கொண்டுதான் இருக்கும் என்று நினைக்கிறேன்.

வெள்ளி, ஏப்ரல் 20, 2007

வலைமகுடம் - டிபிஆர் ஜோசப்

ஒரு ஞாயிற்றுக் கிழமை மதியம். நல்ல சாப்பாடு சாப்பிட்ட அசதி. வீடும் ஊரும் தொலைக்காட்சியிலும், தூக்கத்திலும் மூழ்கிக் கிடக்கிறது. நல்ல ஒரு புத்தகத்தை எடுத்துப் படிக்க எண்ணம் வரும். பொன்னியின் செல்வனின் ஓரிரு அத்தியாயங்களையோ, ஜெஃப்ரி ஆர்ச்சர் அல்லது ஆர்தர் ஹீலியின் கதைகளின் ஒரு பகுதியையோ படித்துப் பார்த்தால் எழுதிய ஆசிரியரின் உயர்குணங்களும் உழைப்பும் மனதை நிறைக்கும்.

அந்த வரிசையில் வலைப்பதிவுலகில் நமக்குக் கிடைத்திருப்பவர் திரு டி பி ஆர் ஜோசப் அவர்கள். திரும்பிப் பார்க்கிறேன் என்ற தலைப்பில் அவர் எழுதும் வாழ்க்கை அனுபவங்களும், சூரியன் என்ற வங்கி மேலிட அரசியல்கள் குறித்த தொடர்கதையும் தமிழில் எனக்குத் தெரிந்து முதல் முறையாக நடக்கும் இதுபோன்ற முயற்சி.

இந்த இரண்டு பதிவுகளையும் தொடர்ந்து படித்து வரும் வாசகர்களுக்கு வங்கிக் கிளைகளில் நடக்கும் பணிகள், எடுக்கப்படும் முடிவுகளின் பின்னணிகள், வங்கி நடைமுறைகள் போன்றவை புரியும் வண்னம் சுவையாக கதை சொல்கிறார் ஜோசப் சார்.

ஆங்கிலத்தில் ஆர்தர் ஹீலி ஒவ்வொரு துறையையும் பல ஆண்டுகள் ஆராய்ச்சி செய்து தகவல்கள் திரட்டி Airport என்று விமானச் சேவைகள் குறித்து, Money Changers என்று வங்கிகள் குறித்து, Wheels என்று கார் தொழிலைக் குறித்து, Hotel என்று நட்சத்திர விடுதிச் சேவையைக் குறித்து, Strong Medicine என்று மருந்துத் துறை குறித்து, In High Places என்று கனடிய அரசியல் குறித்து எழுதியிருக்கிறார். தமிழில் அவ்வளவு ஆழமாக, சில இடங்களில் அதையும் விடச் சிறப்பாக எழுதப்படும் நவீனம் சூரியன் என்று எனக்குப் படுகிறது.

இத்தகைய கதைகளில் நாம் செய்தித் தாளில் மட்டும் படிக்கும் மனிதர்கள் ரத்தமும் சதையும், மூக்குச் சளியுமாக நம் முன் உருவாகிறார்கள். ஆரம்ப அத்தியாயங்களில் ஒன்றில் வங்கியின் இயக்குனரான சிலுவை நாடார் விருந்து ஒன்றில், கைத்துவாலையில் மூக்கைச் சிந்தி சிப்பந்தி கையில் எறியும் ஒரு நிகழ்ச்சியின் மூலம் அவரது நவநாகரீக-பக்குவமில்லாத நடத்தை, அடிமட்டத்திலிருந்து உழைத்து முன்னேறிய வரலாறு, இன்றைக்கு பெரிய பெரிய கோட்டு போட்ட படிப்பாளிகளை ஆட்டி வைக்கக் கூடிய செல்வாக்கு எல்லாமே மனதில் நச்சென்று பதிந்து விடும்.

இப்படியே ஒவ்வொரு பாத்திரமும் தனது முத்திரையைப் பதிக்கும் படி சரியான சம்பவங்களை சுவையாக எழுதிச் செல்கிறார். ஜோசப் சாரின் இந்தப் படைப்புகள் ஆண்டுகள் தாண்டியும் நிலைத்து நிற்கும், வரும் சந்ததியனருக்கு வாசிப்பு மகிழ்ச்சியும் அறிவும் தரும் வேலையைச் செவ்வனே செய்து வரும் என்று எனக்கு நம்பிக்கை இருக்கிறது.

அவரது என்னுலமும், என்கதையுலகமும் தமிழ் வலைப்பதிவுலகை செறிவூட்டுகின்றன. தொடர்கதைகளைப் படிக்கப் பொறுமை இல்லாதவர்கள் சேர்த்து வைத்து மாதாமாதம் படிக்கலாம். ஒரு நடை போய் திரும்பிப் பார்க்கிறேன், சூரியன் தொடர்களின் ஆரம்பப் பகுதிகளையும், சூரியனுக்கு முன் வந்த அப்பா ஒரு ஹிட்லர் என்ற குடும்பக் கதையை முழுமையாகவும் படித்துப் பார்த்து விடுங்கள். அவை படித்தவருக்கு நன்மையை மட்டுமே தரும் அரிதான ஆக்கங்கள்.

யார் மீதும் எதன் மீதும் காழ்ப்போ, போற்றுதலோ, தன் கருத்தையோ சுமத்தாமல், நிகழ்வுகளை நிகழ்ந்தது போலச் சொல்லிப் போகும் டிபிஆர் ஜோசப்பின் படைப்புகள் எனது ஓய்வு நாட்களின் பல பிற்பகல்களை செறிவாக்கியவை. யாரும் பதிப்பகத்தார் இன்னும் அவரது எழுத்துக்களைக் கண்டு கொள்ளாமல் இருப்பது வியப்பைத் தருகிறது. தொலைக்காட்சி தொடர், திரைப்படம் என்று எந்த வடிவிற்கும் மாற்றிக் கொள்ளக் கூடிய வடிவங்கள் அவரது தொடர்கள்.

வியாழன், டிசம்பர் 14, 2006

பத்ரியின் எண்ணங்கள்

பிளாக் என்பது முதலில் தெரிய வந்தது பத்ரியின் மூலம்தான். அப்போது ழ-கணினி வேலைகளில் மூழ்கி, மடற்குழுக்களில் அடித்துக் கொண்டிருந்த நேரம். எங்களை எல்லாம் அபாண்டமாகக் குற்றம் சாட்டுவதாகக் குறைப்பட்டுக் கொண்டு வாதாடிக் கொண்டிருந்தேன் நான். அப்போது ஏற்பாடு செய்திருந்த ழ-கணினி வெளியீட்டு விழாவுக்கு அவரும் வந்து அதைப் பற்றித் தன்னுடைய பிளாக்கில் எழுதுவதாக தமிழினிக்ஸ் குழுவில் மடல் எழுதியிருந்தார்.

அவராவது வந்து பார்த்து, 'நாங்கள் ஒன்றும் இது வரை பணி செய்த தன்னார்வலர்களை ஒதுக்கி விட்டுப் போக நினைக்கவில்லை என்று நடுநிலையாக எழுதட்டும்' என்று நினைத்துக் கொண்டேன். அன்றையக் கூட்டத்துக்கு அரைக் கால் சட்டையுடன், அமெரிக்க பாணி இயல்பான உடையில் வந்திருந்தவர்தான் பத்ரி என்று ஊகித்துக் கொண்டோம்.

அடுத்த நாளிலிருந்து மூன்று பகுதிகளாக கூட்டம் பற்றி எழுதி புகைப்படங்களையும் தன்னுடைய வலைப்பதிவில் வெளியிட்டிருந்தார். அன்றிலிருந்து thoughtsintamil.blogspot.com என்ற வலைமுகவரி தினசரி போய்ப் பார்க்கும் இடமாக மாறி விட்டிருந்தது. ஒவ்வொரு நாளும் புதிய புதிய இடுகைகள், நாட்டு நடப்புகளை அலசும் பார்வைகள் என்று வலைப்பதிவுகள் என்ற பரிமாணம் கொஞ்சம் கொஞ்சமாக புலப்பட ஆரம்பித்தது பத்ரியின் வலைப்பதிவின் மூலமாக.

இந்திய அளவில் நடந்த சிறந்த வலைப்பதிவுகளுக்கான போட்டிகளில் பரிசுகள் பெற்றது, ஆர்வம் குறையாமல் தொடர்ந்து எழுதிக் கொண்டு வந்தது என்று கவனத்தை இழுத்துப் பிடித்தே வைத்திருந்தது பத்ரியின் வலைப்பதிவு. அவரது பதிவில் இணைத்திருந்த வலது பக்கச் சுட்டிகளின் மூலம் மற்ற வலைப்பூக்களையும் போய்ப் பார்க்க ஆரம்பித்திருந்தேன். பல மாதங்களாக அவரது முகப்புப் பக்கம்தான் எனக்கு வலைப்பூக்களை மேய்வதற்கான நுழைவாயிலாக இருந்தது.

தமிழ் மணத்தில் ஏற்பட்ட சச்சரவுகள், மறு மொழி மட்டுறுத்தல் கட்டாயமாக்கப்பட்டது, சிலபதிவுகள் திரட்டுதல் நிறுத்தப்பட்டது போன்றவை நடக்கும் போது பத்ரியின் எழுத்துக்கள் மூலமாகத்தான் தெரிந்து கொண்டேன். அதன் பிறகு எப்போது அந்தத் தொட்டிலை விட்டு வளர்ந்து வெளியே வந்து வலைப்பூவுலகில் தன்னிச்சையாக உலாவவும், எனக்கென ஒரு அடையாளமும் உருவாக்கி வைத்துக் கொள்ளவும் ஆரம்பித்தேன் என்பது நினைவில்லா விட்டாலும், தாயின் மடியைப் போல வலைப்பூக்களின் அரிச்சுவடியை கற்றுக் கொள்ள உதவியது பத்ரியின் பதிவுதான். என்னைப் போலவே பலர் பத்ரியின் பதிவு மூலம் வலைப்பதிவுலகத்துக்குள் நுழைந்திருப்பார்கள் என்பது உறுதி.

திங்கள், டிசம்பர் 04, 2006

வலைமகுடம் - 2

உயரப் பறக்கும் பருந்து போல பார்வை பரத்தி எங்கு என்ன நடக்கிறது என்று உடனடி தீர்ப்பு சொல்லி அதையே ஒரு பதிவாகச் செய்து விட்டவர் போஸ்டன் பாலா. பலருக்கு ஊக்கமூட்டுபவராக இருக்கிறார். ஈதமிழ் என்ற தனது முதன்மைப் பதிவில் அவருக்கே உரித்த பாணியில் வலது பக்கம் நீளமான அலங்கரிப்புகள். விட்டேற்றியான நடையில் சுழன்றடிக்கும் சாட்டையாக வந்து விழும் சொற்களில் பல பொருட்களைப் பற்றி எழுதி விடுவார்.

பாபா என்று பலராலும் அன்பாக அழைக்கப்படும் போஸ்டன் பாலா தனது புகைப்படத்தை வரை கோடுகளாக வெளியிட்டிருப்பதிலிருந்து ஆரம்பித்து ஒவ்வொரு செயலிலும் தனி முத்திரை பதித்திருக்கிறார்.

ஜூன் 2006ல், ஒரு மாத இடைவெளி விட்டு அந்த நேரத்தில் எழுதி வைத்திருந்த இருபது, இருபத்தைந்து பதிவுகளை காலையில் ஒன்று மாலையில் ஒன்றாக வெளியிட்டுக் கொண்டிருந்தேன். அந்த நேரத்தில் தமிழ்மண நட்சத்திரமாக பாலா இருந்தார். திடீரென்று ஒரு பதிவில் இந்த வார உண்மையான நட்சத்திரம் மா சிவகுமார் என்று நான் வெளியிட்ட எல்லா பதிவுகளையும் தொகுத்து போட்டார். அன்று முதல் அவ்வப்போது snapjudgeல் இணைப்பதிலும், எப்பொழுதாவது எழுதும் பின்னூட்டங்களிலும் ஆழமான பாதிப்புகளை ஏற்படுத்தி விட்டார்.

முத்து தமிழினி ஒரு இடத்தில் சொன்னது போல snapjudgeல் ஒரு பதிவு இடம் பெறுவதை வைத்து அதன் தரத்தை எழுதியவர்கள் தெரிந்து கொள்ள முடியும்.

இவரது உள்ளேற்கும் திறன் வியக்கத்தக்கது. ஓவியக் கலை ரசிப்பிலிருந்து, புத்தக விவரிப்புகள், திரைப்பட விமரிசனங்கள், அரசியல் நிகழ்வுகள், சக வலைப்பதிவர்களைக் கலாய்த்தல் என்று எல்லாத் துறைகளிலும் கை வைத்து தனக்கே உரிய பாணியில் அவற்றின் பரிமாணங்களை வெளிப்படுத்தி விடுவார். இவரது ஈரப்பதம் இல்லாத நகைச்சுவைப் பதிவுகள் ஒரு நிமிடம் இழுத்துப் பிடித்து பல மணி நேரங்கள் மனதை உறுத்திக் கொண்டே இருக்கக் கூடியவை.

இது வரை நேரில் பார்த்திரா விட்டாலும், எண்ணங்களால் மிக நெருங்கிய உணர்வைத் தரும் பதிவர் பாலா. என் பார்வையில் பட்ட வரையிலேயே நான்கைந்து இடங்களில் எனது எழுத்து பதிவை பரிந்துரைத்து எழுதியிருந்தார். இந்த எழுத்து பதிவில் எப்போதாவது தடுமாற்றம் வந்து விடுமோ என்று படும் போது ஒரு பின்னூட்டம் பாலாவிடமிருந்து வந்திருக்கும்.

பாலாவின் அன்புக்கும் ஆதரவுக்கும் என்னுடைய வணக்கங்களும் நன்றிகளும்.

வெள்ளி, நவம்பர் 17, 2006

வலை மகுடம் - 1

தமிழ் வலைப்பதிவுகளின் வெற்றியைப் பற்றி எழுதும் போது, வெளிப்படையான உடற்பொருட்கள் பற்றி எல்லோருக்கும் தெரியும்.
  • பிளாக்கர் சேவையை இலவசமாக வழங்கும் நிறுவனம்.
  • தமிழில் ஒருங்குறி எழுத்துப் பலகைகள், எழுத்துருக்கள் உருவாக்கி தமிழில் எழுத வழி செய்த தன்னார்வலர்கள்,
  • வலைப்பதிவுகளைத் திரட்டி பரவலாக்க உதவிய திரட்டி சேவைகள்

இவற்றின் பங்களிப்பு பலமுறை சுட்டிக் காட்டப்பட்டு விட்டன.

எல்லாம் இருந்தாலும் யாராவது எழுதினால்தானே படிப்பவர்கள் வருவார்கள். படிப்பவர்கள் பின்னூட்டம் இட்டால்தானே எழுதுபவர்களுக்கு ஊக்கம் கிடைக்கும்.

இந்த இரண்டிலும் ஓசையில்லாமல் பெரும்பங்கு ஆற்றி வருபவர் எல்லோருக்கும் அறிமுகமான, இரண்டு ஆண்டுகளாக ஒளி வீசி வரும், இந்த வாரம் கூடுதலாக வெளிச்சம் போடப்பட்டுள்ள துளசிகோபால் அவர்கள். தமிழ் வலைப்பூவுலகின் உயிர்ப் பொருளான பதிவுகள், பின்னூட்டங்கள் உருவாக்கத்தில் முழுமையாக பணியாற்றி வருகிறார் அவர்.

வலைப்பதிவு என்பது தன்னுடைய வீடு போல என்பது அவர் கருத்து என்று நண்பர் ஒருவர் குறிப்பிட்டார்.

  1. வீட்டை அழகுபடுத்தி தேவையில்லாதவற்றை நீக்கி வைத்திருப்பது
  2. வீட்டுக்கு வந்து நம்மிடம் பேசுபவர்களுக்கு (பின்னூட்டம் இடுபவர்கள்) மதிப்பளிக்கும் விதமாக அதற்கு உடனேயே பதிலளிப்பது.
  3. நம் வீட்டுக்கு வந்து போனவர்களின் வீட்டுக்குப் போய் அவர்கள் பதிவைப் பற்றிக் கருத்தைப் பின்னூட்டமாக கொடுப்பது.

இந்த மூன்றையும் தவறாமல் கடைப்பிடிக்கும் ஒருவர் துளசி கோபால். இந்த உறவுப் பின்னலுக்கு அடிப்படைகளை எல்லோருமே பின்பற்ற ஆரம்பித்து விட்டால், ஓரிரு மாதங்களில் ஒரு நெருக்கமான சமூகம் உருவாகி விடும்.

இதையெல்லாம் தாண்டி, புதிதாக வந்த யாராவது உருப்படியாக எழுத ஆரம்பித்ததும், அவர்களுக்கு ஊக்கம் அளிக்கும் விதம் படித்து பின்னூட்டம் இடுவது, இந்த உறவுச் சங்கிலிக்குப் புதிய கண்ணிகளைச் சேர்க்கிறது. இதிலும் இந்த வார நட்சத்திரத்துக்கு நிகர் அவரேதான்.

எவ்ரிடே மனிதர்கள் என்று அவர் எழுதும் பதிவுகள் மூலம் அவரது மனித நேயத்தையும் சக மனிதர்கள் மீதான பரிவையும் தெரிந்து கொள்கிறோம். இதுவரை நானூறுக்கும் அதிகமான பதிவுகள் எழுதி (இந்த வாரம் ஐநூறைத் தொட்டு விடுகிறாரோ?) மூத்த, சுறுசுறுப்பான பதிவராக செயல்படுகிறார்.

எங்கெல்லாம் ஆக்கபூர்வமான பதிவுகள் வெளியாகின்றனவோ, அங்கெல்லாம் அவருடைய பின்னூட்டங்களைப் பார்க்கலாம். அதில் என்னுடைய பதிவும் ஒன்று என்பதால் நானும் நல்லபடியாக எழுதுகிறேன் என்று பெருமைப் பட்டுக் கொள்வேன்.

தான் பின்பற்றும் வழிமுறைகளை, அடிப்படை தத்துவங்களை புதியவர்களுக்கும் மற்றவர்களுக்கும் வழிகாட்டியாக அவர் எழுத ஆரம்பிக்கலாம். தமிழ் வலைப்பதிவை வளமூட்டும் அவரது பணிக்கு நன்றி தெரிவித்து அவருக்கு வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ் மணம், தேன்கூடு போன்ற திரட்டிகளில் இது போன்ற செயற்கரிய செயல்படும் பதிவர்களின் சிறு பட்டியலை நிரந்தரமாக முதல் பக்கத்தில் இடம் பெறச் செய்யலாம். அதை ஆரம்பித்து வைக்க துளசிதளம் முதல் பதிவாக இடம் பெற கேட்டுக் கொள்கிறேன்.